கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்



சிறிய மற்றும் மத்திய வர்த்தக நிறுவனங்களுக்கு, அவர்களின் வர்த்தகச் செயல்பாடுகளை அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில், இலவச இணைய தள வசதியை கூகுள் தர முன்வந்துள்ளது. இந்த வசதி இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அண்மையில் கிராமப்புற வளர்ச்சித் துறைக்கான மத்திய அமைச்சர் தலைமையில் நடந்த விழாவில் இந்த வசதி தொடங்கி வைக்கப்பட்டது.
‘India Get Your Business Online,’என்று இந்த திட்டத்திற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிறிய வர்த்தகர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதில் உள்ள தயக்கத்தினைப் போக்கி, அவர்களுக்கான சாப்ட்வேர் தொழில் நுட்பத்தினை எளிமையாக வழங்கி, இணைய தளத்தை வடிவமைத்து, இணையத்தில் அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அனைத்தும் இலவசமாகவே கூகுள் வழங்குகிறது. மூன்று ஆண்டுகளில், இந்தியாவில், ஐந்து லட்சம் வர்த்தக நிறுவனங்களுக்கு உதவ முதல் கட்டமாக கூகுள் முன்வந்துள்ளது. இணையத்தில், எந்தவிதக் கட்டணமும் இல்லாமல், தங்கள் இணைய தளத்தினைத் தாங்களே வடிவமைத்து, இணையத்தில் நிறுத்தலாம். ஓராண்டுக்குப் பின் இதற்கென சிறிய அளவில் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்; இந்த கட்டணம் நிறுவனங்கள் எத்தகைய பதிவை விரும்புகின்றனர் என்பதைப் பொறுத்தது என கூகுள் இந்தியா நிறுவனப் பிரிவு தலைவர் ராஜன் ஆனந்தன் டில்லியில் நடந்த விழாவில் தெரிவித்தார். இந்தியாவில் ஏறத்தாழ 80 லட்சம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தங்களுக்கென இணைய தளங்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 4 லட்சம் என்ற அளவிலேயே உள்ளது. இதற்குக் காரணம், இணைய தள அமைப்பு, அதனால் ஏற்படும் பயன்கள் ஆகியன குறித்துப் பலர் அறியாமல் இருப்பதுதான். ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலியில் இந்த முயற்சிகளை மேற்கொண்டு இதற்கு பலத்த வரவேற்பினை கூகுள் பெற்றது. தற்போது இந்தியாவில் இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளது. 
கூகுள் நிறுவனம் இதற்கென Host Gator, ICICI Bank, மற்றும் Federation of Micro, Small and Medium Enterprises (FISME) ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் வர்த்தகர்கள் www.indiagetonline.in என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகி, அதில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் இணைய தளத்தினை உருவாக்கலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS